• December 5, 2021

தமிழகத்தின் கடன் சுமையைக் குறைப்பது எப்படி?

 தமிழகத்தின் கடன் சுமையைக் குறைப்பது எப்படி?

மாநிலத்தின் கடன் சுமையைக் குறைப்பது எப்படி எனக் கூறுங்கள் என பொருளாதார ஆலோசனைக் குழுவிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக நேற்று (அக்டோபர் 25) பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 10 ஆண்டுகளில் அரசின் வருவாய் வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. 2006-07-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) சொந்த வரிவருவாய் 8.48 சதவீதமாக இருந்தது. சொந்த வரி வருவாய் சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து 2020-21-ம் ஆண்டில் அது 5.46 சதவீதமாக குறைந்தது. ஆக, இந்த 3 சதவீத சரிவின் அளவு, ரூ.60 ஆயிரம் கோடியாகும். அதாவது, தமிழகத்திற்கு இந்த அளவுக்கு வருவாய் இழப்பு நேரிட்டுள்ளது.

2018-19-ம் ஆண்டில்தான் முதன் முறையாக தமிழகத்தின் ஜி.டி.பி.யின் மொத்த வரி வருவாய் விகிதம், தேசிய சராசரியைவிடக் குறைந்தது. தமிழகத்தின் வாகன வரி வருவாய் கேரளா, கர்நாடகா மாநிலங்களைவிட குறைவாக உள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீதான வரி வருவாய் குறைந்துள்ளது. அதோடு அங்கிருந்து வரும் வருவாயில் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு தந்த அளவு

மத்திய அரசு நியமித்த நிதிக்குழுக்கள், தமிழகத்தின் நலனுக்கு எதிராக உருவாக்கிய விதிமுறைகள் காரணமாக தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ.2,577.29 கோடி கிடைக்கவில்லை. அதை கடந்த அரசு வாதாடிப்பெறவில்லை.

2020-21-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதித்து ரூ.3 லட்சத்து 89 ஆயிரம் கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டிக்கொண்டது. இதில் தமிழகத்திற்கு ரூ.837 கோடியை மட்டுமே மத்திய அரசு பகிர்ந்தளித்தது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவு கடந்த 10 ஆண்டுகளில் 5.4 சதவீதம் குறைந்துவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசின் மானியங்களைப் பெறமுடியாமல் போய், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறன் மிகவும் பாதிப்படைந்தது.

ஒருவருக்கான கடன் அளவு

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.2 லட்சம் கோடியாகும். சென்னை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியங்களின் மொத்த கடன் ரூ.5,282 கோடியாகும்.* முறையற்ற நிர்வாகத்தினாலும், மோசமான நிதி மேலாண்மையினாலும் போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும் ஒவ்வொரு கி.மீ. தூரத்திற்கும் ரூ.59 இழப்பு ஏற்படுகிறது. அதன்படி, அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் தினசரி இழப்பு ரூ.15 கோடியாகும்.* கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவதும், சொந்த உற்பத்தி நிலையங்களை அதிகரிக்காததாலும் மின்சார வாரியத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தினசரி இயக்க இழப்பு ரூ.55 கோடி.

தமிழக அரசின் பொதுக்கடன் கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியாகும். அந்த கடனுக்காக தினசரி அரசு செலுத்தும் வட்டி ரூ.115 கோடி. பொதுத்துறை நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் தினசரி செலுத்தும் வட்டித்தொகை ரூ.180 கோடி.

Related post